Saturday, February 1, 2014





சுயத்தின் செதில்கள் கொண்டு நீந்தும்
அகச் சொற்களின் அதிபதி


(சக்திசெல்வியின்“சிநேகத்தின்வாசனை“ 

கவிதைத்தொகுப்பின்வழியில்)                                                    
                                                       ---                                                                     பொன்இளவேனில்

நெருப்பாற்றங் கரையொன்றில் நிற்கின்றேன்

சூடி நிற்கும்

நீர்ப்பூக்களை ரசித்தவாறே                  (பக்கம்-29)


சிநேகத்தின் வாசனை கவிதைத் தொகுப்பின் தலைப்பை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர்களுடைய நெருக்கமான சிநேகிதத்தின் உலகத்திற்கு அழைத்துச் செல்லும் இயல்பைத் தோற்றுவிக்கிறது. வாசித்தவுடனே என்னுடன் பணிபுரியும் “மோகன்ராஜ்“ என்கிற மோகண்ணன்தான் ஞாபகத்திற்கு வந்தார். அவர் தான் எனக்கு பூக்களின் நெருங்கிய அறிமுகத்தை செய்து வைத்தவர். பொறுமைசாலி, பணிந்துபோகும் குணமுடையவர்.  அவருடனான அறிமுகம்  ஒன்னரை வருடத்திற்குள் தான் இருக்கும்.  நெருங்கிய தூரத்தில் இருந்தும். அதற்கு முன் அவரைப் பார்த்ததாக நினைவில் இல்லை. எனது அன்பிற்கு நெருக்கமுடைய நண்பர் செல்வராஜ் மூலமாக அவருடைய அறிமுகம் கிடைத்தது. அவர்கள் இருவரும் நெருக்கமான நண்பர்கள். பக்தியும் உடையவர்கள். இருவருக்குமான வயது வித்தியாசம் இருபது வயது. அவர் அய்ம்பத்தைந்து வயதை கடந்திருந்தாலும் அவருடைய பருமனான உடம்பை தோற்கடித்தவாறு வேகமாக நடக்கக்கூடியவர்


மோகண்ணன் அதிக கடவுள் பக்தியுடையவர். அவர் என்னை உள்பட எல்லோரையும் அண்ணா என்று தான் அழைப்பார். இன்று வரையிலும் எனது  வாகனத்திற்கு அவர் தான் பூக்களைக் கொண்டு வருவார். எனது மகிழுந்தில் உள்ள சிறிய கண்ணாடிக்குள் பரிசுப் பொருளைப் போலுள்ள கணபதிக்கு  வித வித மான பூக்களை பக்தியோடு சூடிப் போவார். அப்பூக்கள் என் கண் முன்னே புத்துணர்வோடு மணம் வீசிக்  கொண்டிருக்கும்.


வெகு நாட்கள் எந்த கடவுள் படங்களுமே என் வாகனத்தில் இல்லாமல் இருந்தது. ஒரு முறை சுமார் முப்பது வயதுடைய வியாபார இளைஞன் எங்கள் அருகாமையில் வந்தான். சில கறுப்பு சிவப்பு கயிறுகள், பொம்மை ஸ்டிக்கர்கள், சில கடவுள் படங்கள், சிலைகள், அவன் கையில் வைத்திருந்த பாயைப் போல குச்சிகளால் பின்னப்பட்ட தட்ட வடிவ கூடையில் தென்பட்டது. அவன் முகத்தில் அலைந்து திரிந்த சோர்வும், களைப்பும், நிறைந்திருந்த்து. கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்த படி துடிப்புடன் அலைந்து கொண்டிருந்தது. பச்சை நிறத்தில் வெள்ளைக் கோடுகள் நிறைந்த சட்டையை அணிந்திருந்தான். அதற்கு பொருத்தமே இல்லாதவாறு சிமெண்ட் நிற பேணடில் வியர்வை அழுக்குகளின் வெண்மை நிற  வரைபடங்கள் முழங்கால் அருகில் தெளிவாக தெரிந்த்து. இரண்டு பாதங்களுக்கு மேலாக பேண்டை சுறுட்டி விட்டிருந்தான். ஒல்லியான உருவம். அவன் முகத்திற்கு பொருத்தமான ஈரப் பசையே இல்லாத சுருட்டை முடி நெற்றிச் சொட்டையின் மேல் படிந்திருந்தது. கறுப்பு நிற முகத்தில் வெய்யில் மின்னிக்கொண்டிருந்தது. சிறிய முகம் அதில் இரண்டு கன்னங்கள் ஒட்டிப்போயிருந்தாலும் அழகுக்கு குறைச்சலில்லை.


அது ஒரு பின் மதிய வேளை, வெய்யிலின் அடர்த்தி சற்று குறைந்திருந்தது.  எங்களிடம் ஏதாவது ஒன்றை வியாபாரத்திற்காக வாங்கச் சொல்லி மன்றாடினான். அந்த இளைஞனுக்கு நிராகரிப்பாக தோன்றிவிடக் கூடாது எனபதற்க்காக நாங்கள்  விலையை விசாரித்து முடித்து விட்டு அவ்விடம் விட்டு நகர முயன்றோம். ஆனால் நகர விடாமல் வழியில் நின்று  எல்லாவற்றையும் ஒவ்வொரு விலையாக சொல்லி வந்த அந்த இளைஞனின் வேதனை புரிந்து கொள்ள முடிந்தது. இருப்பினும் அவ்விடத்தை விட்டு நகரவே முயன்றோம். என்ன நினைத்தானோ தெரியவில்லை. எங்களிடம் அண்ணா வெறும் 50 ரூபாய்க்கு வேண்டுமானாலும் தருகிறேன்.என்றான். ஆச்சர்யத்துடன் பார்த்தோம்..


உண்மையச் சொல்றண்ணா“ (தனது மதத்தைச் சொல்லி) நான் வேறு மதத்தைச் சேர்ந்தவண்ணா இன்னைக்கு வேவாரமே ஆகல ஒரு கோட்டருக்காவது ஆகட்டுமேன்னு தா உங்கள வாங்கிக்கச் சொல்றேன்தொடர்ந்து வலியுறுத்தினான். 


அவ் இளைஞன் இறைஞ்சுகிற தொனி படிந்திருக்கும் வெய்யிலில் அலைந்திருக்கிற அவன் முகம். இறுகிப்போய் பரிதாபமாக தென்பட்டது. எனது விரல்கள் மணி பர்சை கையில் எடுக்க. நண்பர் செல்வராஜ் தடுத்து அவருடைய சட்டைப் பையில் இருந்து 50 ருபாய் தாளை கொடுத்து இந்த கணபதி சிலையை என்னிடம் கொடுத்தார் மேலும் இந்த கடவுள் சிலையை அவரவர் பணத்தில் வாங்க்க் கூடாது இன்னொருவர் மூலமாகத்தான் இதைப் பெறவேண்டும் என்கிற தகவல் விளக்கத்தோடு, சிறிய கணபதியை கைகளில் திணித்தார். அந்த இளைஞன் ஒரு கோட்டருக்கு நேராயிருசுண்ணே“ என மெதுவாக நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து ஆனந்தத்தோடு நகர்ந்தான்.  .


எதன் மீதும் பற்று கொள்ளும் வாழ்க்கை எனக்கு வாய்க்கவுமில்லை. நானாக இதுவரை பூக்களை வைத்து பூஜித்ததில்லை. அவர் கொண்டு வரும் பூக்களில் செவ்வந்திப் பூக்கள், அரளிப் பூக்கள், துளசி இலைகள் கோர்த்த பூச்சரங்கள்.   சிறிய, பெரிய நந்தியா வட்டப் பூக்கள்,  ரோஜாப் பூக்கள், தங்க அரளிப் பூக்கள். மல்லிகைப் பூக்கள் என வகை வகையான பூக்கள் தினமும் கொண்டுவரும் பழக்கமுடையவர். எதற்குண்ணா இவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்றால் சும்மா இருண்ணாசாமிக்குத் தாண்ணாஎன்பார். எனக்கு தினமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் மனிதராக ஒவ்வொரு நாளுமாக அவர் இருக்கிறார். எனது வாகனத்தில் பூக்களின் வாசனைகள் இல்லையென்றால் அவர் விடுமுறை நாளாகத்தான் இருக்கும். காலை நேர அவசரத்தில் இவ்வளவு பூக்களை இந்த மாநகரில் எங்கிருந்து சேகரிக்கிறார் எனபது எனது மூளைக்கு எட்டாத ஒன்று.


காலை வெய்யிலின் மஞ்சள் நிறத்தில் குவியும் மலர்களின் பொலிவும், அழகும், அளவு கடந்த அவைகளின் மகிழ்சியும் பிரகாசமும். மிகவும் பரிசுத்தமான மனநிலையை ஏற்படுத்தி விடுகிறது. விதவிதமான நிறங்களையும் வாசனைகளையும் ருசித்ததுமே மனம் குதூகலம் அடைவதை அறிந்து கொள்ள முடிகிறது. இவை உளவியல் சார்ந்த வகையாகவும் கூட இருக்கலாம் என்று  எனக்குள்  தோன்றியது.  


நானும் என் வாகனமும் இல்லாத நிலையிலும். வாகன இருப்பின் தென் கிழக்கு மூலையில் பாலிதீன் கவர் ஒன்று தொங்கிக் கொண்டிருக்குமானால் அது பூக்களால் மணக்கும் மோகண்ணனின் அன்பும் பாசமுமாகத்தான் இருக்கும். இப்படியான மனித நெருக்கங்கள் கூட வாசனைகளால் புனிதப் படுவதாகவே கருதுகிறேன்.
எழுத்து என்பது படைப் பாளர்களுக்கான  சுய உலகம்.  அதனைத் தொடந்து வரும் அனுபவ உலகத்தை பின் வரும் வாசகர்கள் நெருங்கி விடுகின்றனர். எழுத்து சார்ந்து படைப்பு சார்ந்து இயங்கி உழைத்து தொகுப்பாக்கும் முழுமைக்குள் ஒரு படைப்பாளன் வந்து சேரும் தொலைவு மிக அரிதானது.


“நிழல் கரைதல்“


தூக்கம் வேர் பிடிக்காத் தருணமொன்றில்
மந்த நிலவு வரைந்திருந்த சாம்பல் வர்ணோவிய
சித்திரத்தின் கோடுகளை எண்ணியபடி
தனிமைச் சாளரத்தில் வீற்றிருந்தேன்.
சிலந்தி வலைப் பின்னலாய்
தொடரும் எண்ண முடிச்சுக்கள்
எங்கோ கேட்ட ஒரு ஓலம் தேடி
என் கோலமிழந்தேன்
பின்னிரவில் இலை பெய்து முடித்த
மரமொன்றின் கீழ் நின்று
என் நிழல் நோக்க அது
விம்மிக் கொண்டே கரைந்தழிந்த்து......!       (பக்கம்-4)


படைப்பாளன் ஒவ்வொரு விதமான தகுதிகளாக அவனது ஒவ்வொரு அனுபவமும் அவனைக் உயர்த்திக் கொண்டு சேர்க்கிறது. அதனைத் தொடந்த வாசக அனுபவமும் தொடந்து செல்ல வேண்டிய இலக்குகளும் தவிர்க்க முடியாதது. 


இப்படியான படைப்பாளன் வாசகனுக்குண்டான உறவு எந்தவித சிக்கலுமில்லாமல் தொடர்ந்து வரும் சங்கிலிப் பயணமாகும். எதுவுமே வாசிக்காத அல்லது மூத்த படைப்பாளர்களுடைய படைப்புகளை கொஞ்சமாக விழுங்கிக் கொண்டு அதனோடு ஒப்பிட்டு  ஒரு கூட்டத்திற்குள் ஒரு அனுபவ படைப்பாளனுடைய தொகுப்புகளை படைப்புப் பயணத்தை இழிவாக குறைத்து மதிப்பிடவும் அதை அந்த அநத கூட்டங்களும் ஆமோதித்து வழிமொழியும். சம்பிரதாயங்களையும் நடைமுறை இலக்கியச் சூழலில் காணமுடிகிறது..


மேலும்,  அகரீதியான வாசித்தல் துளியும் இல்லாமல். ஒரு படைப்பாளனை மிக மிக எளிதாக இழிவாக்கி தட்டிவிடுகிற பழக்கம் சூட்சமச் சேராய் நிறைந்துள்ளது.  அந்த எழுத்துகளை வாசிக்க இழந்த வாசகர்கள் மீண்டும் அவ்விடம் வந்து சேர்வதற்கு குறைந்தது இருபது வருடங்களாவது ஆகிவிடும். 


அது போல ஆசானாக கருதி நெருங்கியிருக்கும் வாசகனை அல்லது சிறு படைப்பாளனை அல்லது எதிர்கால எழுத்தாளனை. மூத்த படைப்பாளர்கள் அல்லது அதி மூத்த எழுத்தாளர்கள். தன் அருகிலேயே பொம்மைகளைப் போல வைத்துக் கொள்வதும் மேலும் தமது துதிபாடிகளாக உருமாற்றிக் கொள்ள முயற்சி செய்வதுமான அவல நிலையை. நவீன இலக்கியச் சூழல்களில் அங்கங்கு காணமுடிகிறது. தமக்கான கூட்டங்களை நிறுவிக் கொள்ள முனைவதிலேயே குறியாக இருக்கும் அதி மேதாவித் தனமான சாதுர்ய கருத்துக்களைத் திணித்து, பக்தனாக்கி வைத்திருக்கும் செயல்களை விடுத்து சிறு வாசகனையும் எழுத்தாளராக்க படைப்பாளியாக்க நுட்பங்களை புரியவைக்கத் தவறுகிற மூத்த படைப்பாளர்களின் குய்ய புத்தியிலிருந்து. தம்மை விடுவித்துக் கொள்ளக் கூடிய நுண்ணியத்தை வளரும் படைப்பாளிகள் வளர்த்துக் கொள்ள ணேடியது கட்டாயமாகிறது. வெறும் ஒப்பனை உறுப்புகளாக காலம் கடத்தும் ரசிக, பக்த,  மனநிலையிலிருந்து மேலெழக்கூடிய வாசக மனமே  படைப்பாளர்களுக் குண்டான தனிச் சிறப்பாக அமைய முடியும்.


உனக்கான ஆகாயம்
ஒரு போதும் தொலையாதென
எப்படிச் சொல்வேன் உன்னிடம்?        (பக்கம்-40)


எங்கோ தொலை தூரத்தில். எத்தனையோ எதிர் பார்ப்புகளோடு. முதுகில் முளைத்த கற்பனைகளைச் சுமந்து. ஒருவித மறைபொருளாக கனவுக் கோட்டைகள் எழுப்பும் திட்டங்களோடு றெக்கைகளின் துடிப்புகளை அடக்கி வண்ணங்களின் பூரிப்புகளில்  வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ஒரு இளம் கவிப் படலங்களின் வரிசைகளில்.. தற்போது துள்ளலும் சீற்றமும உருப்பெற்ற வடிவமாக சக்தி செல்வியின் சிநேகத்தின் வாசனை கவிதைத் தொகுப்பு கரங்களில் நிறைந்திருக்கிறது. 


புது எழுத்து பதிப்பாக வெளிவந்திருக்கும் தொகுப்பு இது. முதல் தொகுப்பிற்க்கான அத்தனை பரிதவிப்புகளையும் முழுமையாக அடையாளம் கொண்டிருக்கிறது. மிக இயல்பான மொழிவளம் கொண்டவையாக சில கவிதைகளில் இறுக்கமும் சில கவிதைகளில் எளிமையுமாக பதிந்திருக்கிறது. அவருக்கான வாசிப்பு அனுபவங்களின் சிறப்பே வெகு அழகான மொழிவளம் கை கூடியிருக்கிறது. இவருடைய கவிதைகளில் பெரும் பாலான கவிதைகள் “முக நூல், மற்றும் வலைப் பக்கங்களில் வெளியாகியிருப்பவை.


கவிஞரின் கூற்றைப் போல் மொழி ஆர்வமிக்க தந்தையின் அரவனைப்பும், தாயின் வெள்ளந்தியான பாசமும், திருமணத்திற்குப் பின்னான குடும்ப விதிகளின் பாதிப்புகளும், தமது இரு குழந்தைகளின் இயல்புலகில்.கைவிரித்து அள்ளிக்கொள்ளும் அன்பின் பிரபஞ்சம். இவரது கவிதைகளக்கான களம் என்பதாக மட்டுமல்லாமல்


உலகளாவிய அதிர்சிகளுக்குள்ளாக்கிய ஈழப்போரின் தாக்கமும் அதன் அதர்மங்களால் அழித்தொழித்த தமிழ் மக்களின் அலறல்களும் மரண ஓலங்களும். சர்வதேச சமாதான முயற்சிகளின்  பதற்றமான, ஏமாற்றத்தை அளித்த தோல்விகளும். இவரது மன அதிர்வுகளின் விளைவாக ஏற்பட்ட அக பிரதிபலிப்பை மொழிக்குள் புதைந்து மீளும்  வரத்திற்குள் கவிதைகளாக்கி அதிர் கணங்களை அதன் அழுத்திற்குள் முழ்கி சரணடைந்த பொழுதுகளை கொண்ட துன்பியல் கவிதைகளையும் தொகுப்பில் காணமுடிகிறது.


நமது முதாதையர்களின வழி தாலாட்டாக உழைப்பாளிகளின் உறு துணையாக பிறந்த கவிதைகள் பாடல்கள் வழி மனித இனத்தின் அகம் சார்ந்த உலகத்தைக் மயக்க வைக்கும் விடை சொல்லும்  கடவுள்களாக இந்த பூமியில் பிறந்திருக்கின்றன. இதன் புனித்த் தன்மைகளை சிதைக்க வலுவற்ற ஏனைய அவதாரங்கள் தான் இப் பூமியில் தமது மாற்றுக் குரல்களை வேறு வேறு வடிவங்களாக்கி தமது நம்பிக்கைகளை வேறு வேறு சிதிலங்களாக பிரிந்த அலைக்கழிந்து கொண்டிருக்கின்றனர்.


இவரது காலத்தைப் பாடுகிறது கவிதைகள். பின்வரும் ஏனைய காலத்திலும் பாடிக் கொண்டேதான் இருக்கும் கவிதைகள் அவரவரின் ஆன்மீகத் தன்மைகளுக்குள் புதைந்து கிடக்கும் பரிசுத்த மொழிதான் கவிதைகளினுடையது. அது வசீகரிக்கும் பரப்புலகை நிர்ணயிக்க அவதாரங்களே கிடையாது.              


“தீராப் பெருவெளி“


நெடியதொரு தனிமை வெளியில்
நான் நதியின் ஊடாக
அலைவு கொண்டிருந்தேன்

சலனமுற்ற நீர் பிம்பத்திலோ
பரிகாசத்தின் வேதனை

விதியின் சறுக்குப் பாதை
தந்த கசப்பை
தினமும் விழுங்கி

வன்மம் படிந்த
அம்பெனப் பாய்ந்து பொழுது தோறும்
குருதியைப் பெருக்கும்
சிலரின் சொற்கள்                        (பக்கம்-14)


இந்தக் கவிதையில் தனிமையை நதி என ஓடிக் கொண்டிருப்பதாக குறிப்பிடும் நுட்பமும், தவிப்பும், அழகியலும், சிறப்போடு அமைந்திருக்கிறது. சுற்றங்களால் காயப்படும் போது தம் நிலையிலிருந்து அந்நியப்படும் மனம். சுயத்தின் செதில்கள் கொண்டு பலம் கொண்ட மட்டும் நீந்திக் கடக்கும் சூழலை காட்சிப் பொருளாக ரசிக்கும் வஞ்சகர்களின் கண்களென பரிகசிக்கும் நுண்புலத்தை காட்சிப்  படுத்தியிருப்பது சக்தி செல்வியின் பலம்.  


அதிகமாக நிராகரிப்புகளை தின்று முடித்த ஒருவனால் மிக எளிதாக அவனின் அகச் சொற்களுக்கு அதிபதியாகி விடுகிறான். அவனின் உலகத்தில் தான் ஏகாந்தமான தனிமைச் சொற்களை புனிதமாக்கி இந்த சமூத்தின் மேல் தெளித்துக் கொண்டிருக்கிறான். அவனின் ஒப்பற்ற உறுதியை கற்பாறைகளில் புதைத்து வைக்கிறான் அவனின் வியர்வைகள் தெறித்த இடங்களில் கனிகள் வாசனை களாகவும், கவிதை களாகவும் நிறைந்து  சுவைக்கத் தொடங்குகிறது.
ஆசிரியர்  -சக்தி செல்வி, பக்கம் -44 விலை –ரூ,60,  வெளியீடு –புது எழுத்து
















4 comments:

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது வாழ்த்துக்கள்.
    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் நன்றி.
    வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_14.html

    ReplyDelete
  2. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வணக்கம்

    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ..!!!

    அருமை ...!!!

    எழுத்து பணி ...தொடர வாழ்த்துக்கள் ...!!!

    ReplyDelete